வாழை என்பது நம் பாரம்பரிய விவசாயத்தின் அங்கமாக இருந்து வருகிறது. அதில் குறிப்பாக கேரளாவில் அதிகமாக விளையும் நேந்திரம் வகை வாழை பழம் தனித்துவமான சுவை, நிறம் மற்றும் விற்பனை மதிப்பால் அனைவரையும் கவர்கிறது. இப்போது நம் தமிழ்நாடு விவசாயிகள் இதை அதிகம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகவும் திகழ்கிறது. மேலும் இது பெரும்பாலும் பழுத்த பழங்கள், சிப்ஸ் மற்றும் பிற உணவுகள் உட்பட பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நேந்திரம் பழம் கேரள மாநிலத்தில் மட்டும் விளையும் என எண்ணிக்கொள்ள வேண்டாம். இது நம் நிலத்திலும் நன்றாக விளையும் திறன் கொண்டது. இதனால் விவசாயிகள் நேந்திரம் பழத்தையும் சாகுபடி செய்து நல்ல லாபத்தை பெறுங்கள்!
நேந்திரம் வாழைப்பழ சாகுபடி குறித்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கூறியதாவது: சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தி, பலரக பழ வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். இதன் மூலமாக, ஆண்டுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, ‘பர்ரி’ ரக பேரிச்சை பழசெடி இடைவெளியில், ஊடுபயிராக பலவித ரக வாழைப்பழங்களை பயிரிடுகிறேன். இதில் கேரள மாநிலத்தில் விளையும் நேந்திரம் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் விளையும் ஏலக்கி உள்ளிட்ட பலவித வாழையை சாகுபடி செய்துள்ளேன். நம் மண்ணுக்கு, அருமையாக வளர்கின்றன. பேரிச்சை வருவாய் கிடைக்கும் வரை, வாழை கை கொடுக்கிறது. மேலும் ஒரே இடத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கிறது என்று கூறினார். இதேபோல் நீங்களும் நேந்திரம் பழத்தை உங்கள் நிலத்தில் சாகுபடி செய்யலாம். இந்த நேந்திர பழம் சாகுபடி குறித்து விரிவாக பார்ப்போம்.
நேந்திரம் பழம் சாகுபடி செய்வதற்கு, நிலத்தை தயார் செய்தல், நாற்றுகளை நடுதல், நீர் மேலாண்மை, உரமிடுதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடை செய்தல் போன்ற பல பணிகள் உள்ளன.
நிலத்தை தயார் செய்தல்:
நேந்திரம் வாழை அதிகமான மழையை விரும்பும் பயிராகும். எனவே நல்ல மழை பொழியும் பகுதிகளில் இது சிறப்பாக வளரும். ஆனால் அதிகம் நீர் தேக்கம் இருந்தால் செடி பாதிக்கப்படும். மண்சரிவு இல்லாமல் சற்று உயரமாக உள்ள நிலங்கள் இதற்கு ஏற்றது. நன்றாக உழவு செய்து, இயற்கை உரம் சேர்த்து பயிரிடும் போது அதிக மகசூல் கிடைக்கும்.
நாற்றுகளை நடுதல்:
- வாழை கட்டைகள் நல்ல ஆரோக்கியமாகவும், நோய் இல்லாமலும் இருக்க வேண்டும்.
- 2.5 அடி x 2.5 அடி x 2.5 அடி அளவில் குழி போட வேண்டும்.
- நேந்திரம் வாழை நாற்றுகளை, குழிகளில் நடவு செய்ய வேண்டும்.
- ஒரு குழியில் ஒரு நாற்று நடவு செய்ய வேண்டும்.
- நாற்றுகளின் வேர் பகுதி மண்ணில் புதைந்திருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
- நடவு செய்த பிறகு, உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நீர் மேலாண்மை:
நேந்திரம் வாழைக்கு அடிக்கடி நீர் தேவைப்படும். குறிப்பாக வேர்கள் வலுவாக வளர்ந்து பழம் உருவாகும் காலங்களில் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை பாசனம் செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தினால் நீர் மிச்சமாகியும், செடிகளுக்கு போதுமான ஈரப்பதமும் கிடைக்கும்.
உரம் இடுதல்:
- நேந்திரம் வாழைக்கு உரமிடுவது, நல்ல மகசூல் பெற மிகவும் முக்கியம்.
- தொழு உரம், தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும்.
- இயற்கை உரங்களை பயன்படுத்துவது சிறந்தது.
- உரங்களை, பயிருக்கு ஏற்றவாறு சரியான அளவில் இட வேண்டும்.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை:
- நேந்திரம் வாழைக்கு, கருந்தலைப்புழு, தண்டு துளைப்பான் போன்ற பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது.
- இலை புள்ளி நோய், வாடல் நோய் போன்ற நோய்களும் தாக்கும்.
- பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை பயன்படுத்த வேண்டும்.
- நோய் தாக்கிய செடிகளை உடனடியாக அப்புறப்படுத்தி, தீயிட்டு எரிக்க வேண்டும்.
அறுவடை:
- நேந்திரம் வாழை, நடவு செய்த 10 - 12 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.
- பழங்கள் பழுத்த உடன் அறுவடை செய்ய வேண்டும்.
- அறுவடை செய்த பழங்களை, நன்கு உலர்த்தி, சேமித்து வைக்க வேண்டும்.
மகசூல் மற்றும் வருமானம்:
ஒவ்வொரு செடியும் சராசரியாக 15 - 20 கிலோ வரை கனிகளை தரும். ஒரு ஏக்கர் நிலத்தில் 1000 - 1200 செடிகள் வரை நடக்க முடியும். சந்தை விலையில் ஒவ்வொரு பழமும் நல்ல விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
நேந்திரம் பழத்தின் பயன்கள்:
நேந்திரம் வாழைப்பழம் செரிமானத்தை மேம்படுத்துதல், ஆற்றலை அதிகரிப்பது மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தென்னிந்திய உணவு வகைகளில் அதன் உறுதியான அமைப்பு, இனிப்பு சுவை மற்றும் பல்துறை திறனுக்காக அறியப்படுகிறது. இது பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகவும். இது குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து உணவாக திகழ்கிறது. இது சமையலிலும் பயன்படுகிறது. பச்சையாகவோ அல்லது சமைத்ததாகவோ சாப்பிடலாம்.